Thursday 15 March 2012

பாரதியின் வாழ்வியல்


ஆன்மிகம் பற்றி நவீன தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் பாரதியார்தான். பாஞ்சாலி சபதம், பகவத்கீதை ஆகியவற்றை புதிய தமிழில் அவரே வடித்துக் கொடுத்தார்.

ஆன்மிகத்தைத் தனி மனிதன் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்து ஆன்ம ஒளி பெறவேண்டும் என்பதற்காக தன் எழுத்தைச் செலவிட்ட மறுமலர்ச்சி எழுத்தாளர்களுள் பாரதியே முதலிடம் பெறுகிறார்.



பாரதியின் பிரார்த்தனை

கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதிற்குள்ள மனத்திடனும், இளைஞருடைய உத்ஸாகமும், குழந்தையின் ஹிருதயமும், தேவர்களே, எனக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

பாரதியின் சங்கல்பம் 

பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிகக் காரியங்களை ஊக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன். மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்புண்டாக இடங்கொடேன்.

சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்களெல்லாம் தேவர்களின் தொழில் போல் இயங்குமாறு சூழ்வேன்.

பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருளீட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பென்று கொள்வேன்.

எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சிந்தனை இவற்றோடிருப்பேன்.

பாரதி போற்றும் மனிதன் 

வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்ப பிழைப்பவன், நரி.

ஊக்கமின்றி ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனம் சோர்ந்திருப்பவன் தேவாங்கு.

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றி கவலையின்றி அற்ப சுகங்களில் மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

சொந்தமாக பிழைக்காமல், அந்த அக்கறை இன்றி பிறருக்குப் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக்கொண்டு வயிறு வளர்ப்பவன் நாய்.

அறிவின் துணைகொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி, முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி திரும்பத் திரும்பக் கூறுபவன் கிளிப்பிள்ளை.

பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன், கழுதை.

வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி.

தான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் கழுகு.

ஒரு நவீன உண்மை வரும்போது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல்,அதனைக் கண்டு வெறுப்படைகிறவன் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும் ஆந்தையைப் போன்றவன்.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதனென்றும் தேவனென்றும் சொல்லுவதற்கு உரியவன் ஆவான்.