Monday, 13 February 2017

கோளறு பதிகம்வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.


Wednesday, 23 December 2015

தொடங்கும் வேலைகள் தடையின்றி இனிதே நிறைவடைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்
திருஆலவாயில்(மதுரையில்) சமணர்களுடன் வாதிடுவதற்கு புறப்படும் பொழுது சொக்கநாதப்பெருமானை வணங்கி சம்பந்தப்பெருமான் பாடிய பாடல் இது.

திருஞானசம்பந்தப்பெருமான் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை வென்றது நாம் அறிந்ததே.

திருச்சிற்றம்பலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்         தலம்: மதுரை          பண்:பழம்பஞ்சரம் 

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக் 
கைதவம் உடைக் கார் அமண் தேரரை 
எய்தி, வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


மறை வழக்கம் இலாதமா பாவிகள் 
பறி தலைக் கையர் பாயுடுப்பார்களை 
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் 
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அந்தணாளர் புரியும் அருமறை 
சிந்தை செய்யா அருகர் திறங்களைச் 
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


வேட்டு வேள்வி செயும் பொருளை விளி 
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை 
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 
  


அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் 
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் 
கழல வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற 
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் 
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


நீலமேனி அமணர் திறத்து நின் 
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர் 
கோல மேனியது ஆகிய குன்றமே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத் 
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு 
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் 
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 

திருச்சிற்றம்பலம் 

Wednesday, 17 April 2013

"என் கணவர்" – திருமதி.செல்லம்மாள் பாரதி உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி.செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால் என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Friday, 22 March 2013

தண்ணீரை வீணாக்காமல் இருக்க சில டிப்ஸ் இங்கே...
                      


ஷவரை திருகிவிட்டு ஆனந்தமாக குளிப்பது நன்றாகதான் இருக்கும். ஆனால் ஒரு குடம் நீருக்காக கஷ்டப்படுபவர்களை நினைத்தாவது தண்ணீரை அவ்வாறு வீணாக்காமல் வாளியில் நீர் பிடித்து குளியுங்கள். 

வீட்டை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யத்தேவையில்லை. ஈரத்துணியால் துடைத்தாலே போதும்.

 

தினமும் கைகளால் துவைப்பதைவிட வாரத்திற்கு ஓரிருமுறை வாஷிங் மெஷினில்  துணிகளை துவைக்கலாம்.

கார், பைக் போன்றவற்றை ஈரத்துணியால் துடைத்தால் போதும், நிறைய தண்ணீர் ஊற்றி அலம்ப வேண்டாம்.


                              

ஷேவ் செய்யும்போதும், பல் துலக்கும்போதும் வாஷ் பேசினில் தண்ணீரை திறந்துவிட வேண்டாம்.

காய்கறிகள் அலம்பிய நீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம். செடிகளுக்கு நீரூற்ற பூவாளிகளை பயன்படுத்தலாம். மொட்டைமாடியில் விழுந்து வீணாகச்  சாக்கடையில் கலக்கும் நீரைக்கூட திறமையாக அறிவியல் முறைப்படி சேமித்து, சுத்திகரித்து உபயோகப்படுத்தலாம்.கிணறு உள்ளவர்கள் கிணற்றில் அந்த நீரை விழச்செய்யலாம். நிலத்தடி நீரும் உயரும்.இன்றே ஒவ்வொரு துளி நீரையும் சேமித்தால்தான் நாளைய தலைமுறை தண்ணீருக்காக போராடாமல் இருக்கும்.

நன்றி-PTA செய்தி O'01

Wednesday, 25 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 3: ககோளம் - பூகோளம்ககோளம் - பூகோளம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

 

ககோளம்

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்,
  • அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி,
  •  புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
  •  திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி,
  •  ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
  •  விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி,
  •  மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

Tuesday, 24 April 2012

குபேர பூஜை

தீபாவளி, அக்ஷய த்ரிதியை, வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி போன்ற நாட்களில் மாலை குபேரனை நினைத்து பூஜை செய்வதால் செல்வம் பெருகும், குடும்பம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.குபேரனின் திருஉருவப்படத்திற்கு முன் பணம், பொருள் வைத்து பூமாலை சாற்றி 12 அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பூ, அட்சதை கையில் எடுத்துக்கொண்டு 12 முறை இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

த்வாதஸ லிங்கஸ்துதி

சௌராஷ்ட்ரே
ஸோமனாதஞ்ச ஸ்ரீசைல்யே
மல்லிகார்ஜூனம் உஞ்சைன்ய
மஹாகாளீம் ஓங்கார மமலேஸ்வரம்
பால்யம் வைத்யனாதஞ்ச டாகின்யாம்
பீமஸங்கரம் ஸேது பந்தேது ராமேஸம்
நாகேஸம் தாறுகாவனே
வாரணஸ்யாம்ஸூ விஸ்வேஸம்
த்ரியம் பகம்கௌதமீதடே
ஹிமாலயேது கேதாராம் குஸ்மேஸஞ்ச
சிவாலயே ஹேதானி ஜ்யோதி லிங்கானி
ஸாயங்கால ஹபடேர் நித்தயம்
ஸப்த ஜன்மக்ருதம் பாபம்
ஸ்மரணேன வினிஸ்யதி:

குபேர நாமாவளி

ஓம் குபேராய நம:
ஓம் நரவாகனாய நம:
ஓம் சிவஸகாய நம:
ஓம் ஸ்ரீநிவாச ஸந்துஸ்டாய நம:
ஓம் பம்மாவதி ப்ரிய அனுஜாய நம:
ஓம் யக்ஷராஜாய நம:
ஓம் தனதான்யாதிபதயே நம:
ஓம் மணி பத்ரார்ச்சிதாய நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹனீயாய நம:
ஓம் மஹார்ஹ மணி பூஷணாய நம:
ஓம் ஸ்ரீவித்யா மந்த்ர உபாஸஹாய நம:
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகா ப்ரிய பக்தாய நம:
ஓம் திக்பாலாய நம:
ஓம் நவநாயகாய நம:
ஓம் நிதினாம் பதயே நம:பின் பால் பாயசத்தை நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து, குங்குமத்தை கரைத்து அதையும் ஆரத்தி எடுத்து நிறைவு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் அனைவரும் இதில் கலந்துகொண்டு செய்வது நல்லது.
பூஜை முடிந்தவுடன் எல்லோரும் குபேரன் திருஉருவப்படத்திற்கும், பணம் பொருளிலும் அட்சதை தூவி நமஸ்கரிக்க வேண்டும்.

மற்றவர்களையும் அட்சதைபோட சொல்லி அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் தருதல் நல்லது.


Monday, 9 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 2

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை 

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. 

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. 

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது. 

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.

மாதப்பெயர்களில் வீதிகள் 

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிற கோவில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருள்கிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச்சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணிவீதி மட்டும் ஆவணி மூல வீதி என்று அழக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி ஆவணி மூலவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முதல் திருவிளையாடல்

மதுரையில் சிவபெருமான், 63 திருவிளையாடள்களை நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிகாலத்தில்சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.