Showing posts with label மதுரை மீனாட்சி அம்மன். Show all posts
Showing posts with label மதுரை மீனாட்சி அம்மன். Show all posts

Wednesday, 23 December 2015

தொடங்கும் வேலைகள் தடையின்றி இனிதே நிறைவடைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்




திருஆலவாயில்(மதுரையில்) சமணர்களுடன் வாதிடுவதற்கு புறப்படும் பொழுது சொக்கநாதப்பெருமானை வணங்கி சம்பந்தப்பெருமான் பாடிய பாடல் இது.

திருஞானசம்பந்தப்பெருமான் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை வென்றது நாம் அறிந்ததே.

திருச்சிற்றம்பலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்         தலம்: மதுரை          பண்:பழம்பஞ்சரம் 

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக் 
கைதவம் உடைக் கார் அமண் தேரரை 
எய்தி, வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


மறை வழக்கம் இலாதமா பாவிகள் 
பறி தலைக் கையர் பாயுடுப்பார்களை 
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் 
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அந்தணாளர் புரியும் அருமறை 
சிந்தை செய்யா அருகர் திறங்களைச் 
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


வேட்டு வேள்வி செயும் பொருளை விளி 
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை 
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 
  


அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் 
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் 
கழல வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற 
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் 
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


நீலமேனி அமணர் திறத்து நின் 
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர் 
கோல மேனியது ஆகிய குன்றமே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத் 
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு 
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் 
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 

திருச்சிற்றம்பலம் 

Wednesday, 25 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 3: ககோளம் - பூகோளம்



ககோளம் - பூகோளம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

 

ககோளம்

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்,
  • அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி,
  •  புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
  •  திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி,
  •  ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
  •  விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி,
  •  மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

Monday, 9 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 2

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை 

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. 

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. 

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது. 

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.

மாதப்பெயர்களில் வீதிகள் 

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிற கோவில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருள்கிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச்சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணிவீதி மட்டும் ஆவணி மூல வீதி என்று அழக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி ஆவணி மூலவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முதல் திருவிளையாடல்

மதுரையில் சிவபெருமான், 63 திருவிளையாடள்களை நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிகாலத்தில்சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

Friday, 6 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 1


விபூதி விநாயகர்
 
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுளையும்போது பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் விபூதியை விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். இவரை வணங்கினால் வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் எனும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்


மீனாக்ஷி அம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும், பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இரட்டை விநாயகரை வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை



முக்குறுணி விநாயகர்

மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.