Showing posts with label திருமுறை திருப்பதிகம். Show all posts
Showing posts with label திருமுறை திருப்பதிகம். Show all posts

Monday, 13 February 2017

கோளறு பதிகம்



வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.


Wednesday, 23 December 2015

தொடங்கும் வேலைகள் தடையின்றி இனிதே நிறைவடைய பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்




திருஆலவாயில்(மதுரையில்) சமணர்களுடன் வாதிடுவதற்கு புறப்படும் பொழுது சொக்கநாதப்பெருமானை வணங்கி சம்பந்தப்பெருமான் பாடிய பாடல் இது.

திருஞானசம்பந்தப்பெருமான் அனல்வாதம், புனல்வாதம் செய்து சமணர்களை வென்றது நாம் அறிந்ததே.

திருச்சிற்றம்பலம்

பாடியவர்: திருஞானசம்பந்தர்         தலம்: மதுரை          பண்:பழம்பஞ்சரம் 

வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் 
ஆதமில்லி அமணொடு தேரரை 
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக் 
கைதவம் உடைக் கார் அமண் தேரரை 
எய்தி, வாது செயத் திருவுள்ளமே
மைதிகழ் தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


மறை வழக்கம் இலாதமா பாவிகள் 
பறி தலைக் கையர் பாயுடுப்பார்களை 
முறிய வாது செயத் திருவுள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அறுத்த அங்கம் ஆற ஆயின நீர்மையைக்
கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் 
செறுத்து, வாது செயத் திருவுள்ளமே
முறித்த வாண் மதிக் கண்ணி முதல்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அந்தணாளர் புரியும் அருமறை 
சிந்தை செய்யா அருகர் திறங்களைச் 
சிந்த வாது செயத் திருவுள்ளமே
வெந்தநீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


வேட்டு வேள்வி செயும் பொருளை விளி 
மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை 
ஓட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 
  


அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் 
விழல் அது என்னும் அருகர் திறத்திறம் 
கழல வாது செயத் திருவுள்ளமே
தழல் இலங்கு திருவுருச் சைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற 
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் 
தேற்றி வாது செயத் திருவுள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


நீலமேனி அமணர் திறத்து நின் 
சீலம் வாது செயத் திருவுள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியதோர் 
கோல மேனியது ஆகிய குன்றமே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத் 
தென்ற வாது செயத் திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே 
    ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் 
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே 


கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு 
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் 
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே 

திருச்சிற்றம்பலம்