Showing posts with label படித்தது.... Show all posts
Showing posts with label படித்தது.... Show all posts

Wednesday, 17 April 2013

"என் கணவர்" – திருமதி.செல்லம்மாள் பாரதி உரை

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி.செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால் என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.
சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Wednesday, 25 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 3: ககோளம் - பூகோளம்



ககோளம் - பூகோளம்

மீனாக்ஷி அம்மன் கோவிலில் பழைய திருமண மண்டபத்தில் ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.

 

ககோளம்

சூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஓவியத்தில்,
  • அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி,
  •  புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி
  •  திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி,
  •  ஹஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி
  •  விசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி,
  •  மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.

பூகோளம்

இந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.

Monday, 9 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 2

48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை 

மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் கருவறை 48 ஆண்டுகளாக  மூடப்பட்டு இருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின்போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்து நொறுக்க முயற்சி நடந்தது. 

கோயில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர் கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவலிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலைதான் சுந்தரேஸ்வரர் என்று நினைத்து அதை சிதைக்க முற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 ஆண்டுகளாக அடைக்கப்பட்டு பூஜை இல்லாமல் இருந்தது. 

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களை வென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடு செய்தார். அப்போது 48 ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட சந்தனம் நறுமணம் வீசியது. சிவலிங்கத்தின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளி விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டு இருந்தது. 

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமி சன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் உள்ளது. அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம் பெற்றுள்ளது.

மாதப்பெயர்களில் வீதிகள் 

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிற கோவில்களில் இல்லாத ஒரு விசேஷம் உண்டு. அதாவது தமிழ் மாதங்களில் நடக்கும் விழாவின் போது, சுவாமி, அம்பாள் எந்த வீதிகளில் எழுந்தருள்கிறார்களோ அந்த வீதி, அம்மாதத்தின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதி என கோயிலைச்சுற்றி நான்கு வீதிகள் இருக்கிறது.


இதில் ஆவணிவீதி மட்டும் ஆவணி மூல வீதி என்று அழக்கப்படுகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 'பிட்டுக்கு மண் சுமந்த லீலை' இம்மாதத்தில் நிகழ்ந்தது. எனவே, ஆவணி மூலம் நட்சத்திரத்தில் பிட்டுத்திருவிழா இங்கு விசேஷமாக நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமி ஆவணி மூலவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

முதல் திருவிளையாடல்

மதுரையில் சிவபெருமான், 63 திருவிளையாடள்களை நிகழ்த்தினார். இதில் முதல் திருவிளையாடலாக இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த நிகழ்வு அமைந்தது. இந்த திருவிளையாடல் சித்ரா பௌர்ணமியின்போது நடக்கிறது. அன்று உச்சிகாலத்தில்சிவன் சன்னதி எதிரில், இந்திரன் சிலையை வைத்து சிவனுக்கு தீபாராதனை செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதீகம்.

Friday, 6 April 2012

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்... பகுதி 1


விபூதி விநாயகர்
 
தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுளையும்போது பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் விபூதியை விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. 'விபூதி' என்றால் 'மேலான செல்வம்' என்று பொருள். இவரை வணங்கினால் வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் எனும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டை விநாயகர்


மீனாக்ஷி அம்மன் சன்னதிக்கு இடது புறத்திலும், பிரகாரத்திலும் இரட்டை விநாயகர் சன்னதி இருக்கிறது. இரட்டை விநாயகரை வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை



முக்குறுணி விநாயகர்

மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். ஒரு குறுணி என்பது 4 படி (6கிலோ). விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது. அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பக்குளம் வெட்டியபோது பூமிக்குள் இந்த விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். அதை மீனாக்ஷி அம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார் இந்த விநாயகர் முன்பு உள்ள் நிலை விளக்குகளில் திருமலைநாயக்கர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவங்களை பார்க்கலாம்.